
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையை பாதுகாப்புப் படைகள் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன.
சிறையில் பாதுகாப்பைப் பேணுவதற்காக பெருமளவிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

நேற்று இரவு (06) சிறைச்சாலையைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கஜநாயக்க இதனை தெரிவித்தார்.
இதற்கிடையில், சிறைச்சாலை மோதல்களில் படுகாயமடைந்த 20 நபர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் 58 நபர்கள் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கைதிகள் குழுவிற்கும், போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்த மற்றொரு குழுவிற்கும் இடையே 05ஆம் திகதி முதல் மோதல் வெடித்தது.
அந்தச் சம்பவத்தின் போது, இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளும் காயமடைந்தனர். இரண்டு கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.
நேற்று கைதிகளிடையே மீண்டும் ஒரு கலவரம் வெடித்தது. சிறை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, அவர்கள் கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்தனர்.
அவர்களில், 07 சிறை அதிகாரிகளும் 17 கைதிகளும் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கொழும்பு குற்றப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவை இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 700 கைதிகள் அகுனகொலப்பலஸ்ஸ, தும்பர, அனுராதபுரம், பொலன்நறுவை மற்றும் குருவிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வன்முறைச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின்படி, நேற்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட இக்குழுவிற்கு – ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெனாண்டோ தலைமை தாங்குகிறார்.
இக்குழுவின் மற்ற உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மோகன் வீரக்கோன் ஆகியோர் உள்ளனர்.
இச்சம்பவத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்துதல், அதன் காரணங்களைக் கண்டறிதல், தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்மொழிதல் ஆகிய பணிகள் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மோதல்களில் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் இன்று நடத்தப்பட உள்ளன.
உயிரிழந்த கைதிகளை அடையாளம் காண உறவினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காணும் செயல்முறையை எளிதாக்கும் வகையில், உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் இன்று வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பைத்தியசாலை தெரிவித்துள்ளது.


