தலைப்புச் செய்திகள்

நடிகர் விஜய்யின் தொழுகையும், தமிழக முஸ்லிம்களின் கோமாளித்தனமும்

தொழுகையில் இணைந்து கொண்ட நடிகர் விஜய்

– ஆசிரியர் கருத்து –

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (07) சென்னை – ராயப்பேட்டையில் நோன்பு துறக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில் நடிகர் விஜய்யும் பங்கேற்றிருந்தார்.

தனது கட்சி சார்பில் முஸ்லிம்களுக்காக இப்தார் (நோன்பு துறத்தல்) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதும், அதில் விஜய் கலந்து கொள்வதிலும் பிரச்சினைகள் இல்லை. ஆனால், அந்த நிகழ்வின் முடிவில் நடிகர் விஜய் – மஃரிப் கூட்டுத் தொழுகையிலும் ஈடுபட்டுள்ளார்.

இது கோமாளித்தனமான செயற்பாடு என்பதோடு, இவரை தொழுகையில் சேர்ந்துக் கொண்ட முஸ்லிம் தரப்பினரும் தங்களை கோமாளிகளாக்கிக் கொண்டுள்ளனர்.

நோன்பு துறக்கும் நிகழ்வுகளில் – மாற்று மதத்தவர்களை அழைத்து, நோன்பு துறப்பதற்கான உணவுகளை அவர்களுக்கும் கொடுத்து உண்பது, ஒரு நல்ல கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது. அதில் தவறுகள் இல்லை. நோன்பு நோற்ற முஸ்லிம்கள் தங்கள் நோன்புகளைத் துறக்கும் அதே நேரத்தில், அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் மாற்று மதத்தவர்கள் அங்கு பகிரப்படும் உணவுகளை உண்டு மகிழ்வார்கள். இங்கே மாற்றுக் கலாசாரத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகின்றன.

ஆனால், இஸ்லாமியரல்லாத ஒருவரை இணைத்துக் கொண்டு – கூட்டுத் தொழுகை நடத்துவதென்பது முட்டாள்தனமான செயற்பாடாகும்.

இஸ்லாத்தில் கலிமா, தொழுகை, நோன்பு, சக்காத் மற்றும் ஹஜ் எனும் 05 கடமைகள் உள்ளன. இவற்றில், கலிமாவை கூறியவர்தான் – ஏனைய கடமைகளை நிறைவேற்ற முடியும். கலிமா என்பது –  அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது நபி இறைவனின் தூதர் எனவும் நம்புவதாகும்.

எனவே, முஸ்லிம் அல்லாத நடிகர் விஜய் தொழ முடியாது. அவரை முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகையில் சேர்த்துக் கொள்ளவும் முடியாது. இது தொடர்பான தெளிவு நடிகர் விஜய்க்கு இல்லை என்று வைத்துக் கொண்டாலும், அவரை தொழுகையில் இணைத்துக் கொண்ட இஸ்லாமியர்கள் இந்த விடயத்தில் முட்டாள்களாக நடந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கோமாளித்தனமாக முட்டாள் கூத்துக்கள் – அநேகமாக தமிழக முஸ்லிம்களிடையே அதிகம் நடப்பதை தொடர்ந்தும் கவனித்து வருகின்றோம். அரசியலுக்காக, அல்லது தமது சுய விருப்பு – வெறுப்புகளுக்காக எந்தவொரு சமயமும், கலாசாரமும் கோமாளித்தனமான முறையில் கையாளப்படக் கூடாது.

ஒருவர் தொழுவதற்கும், நோன்பு நோற்பதற்கும், சக்காத் கொடுப்பதற்கும், ஹஜ் செய்வதற்கும் – அடைப்படைத் தகுதி என்னவென்றால், அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். இதனைத் தெரிந்து கொண்டே – நடிகர் விஜய்யை தமது தொழுகையில் இணைத்துக் கொண்ட முஸ்லிம்கள், தங்கள் தவறுக்காக பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

அதேபோன்று, தமிழக உலமா சபை மற்றும் வக்பு வாரியம் ஆகியவை இந்த விடயத்தில் உறுதியான தெளிவை அறிவிக்க வேண்டும்.

நடிகர் விஜய் மக்காவிலுள்ள கஃபதுல்லாவுக்குச் சென்று – அங்கு ஹஜ் செய்வதென்பது எவ்வாறு முடியாத காரியமோ, அது போலவே – அவர் பள்ளிவாசல் சென்று, அங்கு தொழுகையில் ஈடுபட முடியாது என்பதையும் விஜய்யும் விளங்கிக் கொள்தல் வேண்டும்.