தலைப்புச் செய்திகள்

அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீத் ஆதரவளிப்பதாக உறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவதாக, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் உறுதியளித்துள்ளார்.

அனோஜனுக்கான ராஜதந்திர முயற்சியின் ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கையாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஃபைசர் முஸ்தபா மற்றும் உப்புல் குமாரப்பெரும ஆகியோர் இன்று (23) மாலைதீவில் நஷீத்தை சந்தித்தனர்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அனோஜன் சிவராசாவின் கருத்துக்கள் எவ்வளவு தீவிரமானவை என்பதை நஷீத் ஏற்றுக்கொண்ட போதிலும், மனிதாபிமான அடிப்படையில் அந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்குத் தான் ஆதரவளிப்பதாகக் கூறினார்.

ஃபைசர் முஸ்தபா மற்றும் உப்புல் குமாரபெரும ஆகியோரை சவூதி அரேபியாவிற்கு விசேட ராஜதந்திரத் தூதுவர்களாக அனுப்ப – இலங்கை அரசு தீர்மானித்தது. இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து, இந்த இரு சட்டத்தரணிகளும் இம்முயற்சியை மேற்கொள்வதாகவும், இந்தப் பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்தாமல் தங்கள் சொந்த நிதியையே செலவிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

நஷீத்துடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாகவும், எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியாவிற்குப் பயணம் செய்யத் தயாராகி வருவதாகவும் உப்புல் குமாரபெரும தெரிவித்துள்ளார்.