தலைப்புச் செய்திகள்

கொழும்பில் நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது

இலங்கையில் வயதுக்கு வந்த சுமார் 15 சதவீதமானோர் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர் என்றும், இவர்களில் சுமார் 40 சதவீதத்தினருக்குத் தங்களுக்கு இந்நோய் இருப்பது தெரியாது எனவும் டொக்டர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினத்தை இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனுசரிக்கும் வேளையில், இந்த புள்ளிவிவரங்களை அவர் கூறினார்.

இலங்கை நீரிழிவு சங்கத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நாளமில்லாச் சுரப்பி நிபுணருமான (Endocrinologist) டொக்டர் மனில்க சுமனதிலக்க, நீரிழிவு நோய் – பொது சுகாதாரத்திற்கு மிகவும் தீவிரமான கவலையளிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், கொழும்பில் நிலைமை இன்னும் கவலைக்குரியதாக இருப்பதாகவும், அங்கு சுமார் நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிறுவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், இளம் வயதினரிடையே ‘வகை 2’ (Type 2) நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்த அவர், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 20 முதல் 79 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 1.6 மில்லியன் வயதுக்கு வந்தோர் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் சுமார் 603,000 பேருக்கு, அதாவது 37.7 சதவீதத்தினருக்கு, நோய் இருப்பது கண்டறியப்படவில்லை என்று அந்த கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.

நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோதோ அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாதபோதோ – இந்நிலை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

இந்நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தவறினால், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, பார்வைக் குறைபாடு, நரம்பு பாதிப்பு மற்றும் கால்களை அகற்ற வேண்டிய சூழல் போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படலாம்.

நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையாகக் கையாள்வதன் மூலம் இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதீத தாகம், காரணமின்றி உடல் எடை குறைதல், சோர்வு மற்றும் பார்வையில் மங்கலான தன்மை போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், ‘வகை 2’ நீரிழிவு நோய், வெளிப்படையான அறிகுறிகள் ஏதுமின்றி மெதுவாக உருவாகக்கூடும்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பேணுதல், வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல், சமச்சீரான உணவை உட்கொள்ளுதல் மற்றும் புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்த்தல் ஆகியவை ‘வகை 2’ நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

நீரிழிவு நோயினால் உலகளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் நொவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, “நீரிழிவு நோய் குறித்த ஆரம்பகால நடவடிக்கை” (Early action on diabetes) என்ற கருப்பொருளின் கீழ், நோயை முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சைக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.