தலைப்புச் செய்திகள்

பார்வையற்ற மாணவர் ஒருவர் தன்னிடம் கேட்ட, ஆச்சரியமான உதவியை நினைவுகூர்ந்து, விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய றிஷாட் பதியுதீன்

– எம்.ஏ. சாஜித் –

”பார்வையற்ற மாணவர் ஒருவரிடம், ஒரு தடவை என்ன உதவி வேண்மென நான் கேட்டபோது, உம்றா செய்வதற்கான வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தருமாறு கோரினார். உலகக் கல்வியைக் கற்பது எவ்வளவு முக்கியமோ – அதேபோன்று ஆத்மீகத்திலும் பற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுத்தீன் வலியுறுத்தினார்.

புத்தளம் தெற்கு கல்விக்கோட்டத்தில் உயர் தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில், அனைத்துப் பாடங்களிலும் A தர சித்திகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி – விருது வழங்கும் Award of excellence -2026 எனும் விழா, இன்று (14) கொந்தாந்தீவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு – நாடு பூராகவும் Award of excellence -2026 எனும் விழாவை நடத்திவருகின்றது.

மேற்படி நிகழ்வில் றிஷாட் பதியுத்தீன் தொடர்ந்து பேசுகையில்;

“தனது படிப்புக்காக தட்டச்சு ஒன்றைப் பெற்றுத் தருமாறு மூன்று வருடங்களுக்கு முன்னர் பார்வையற்ற ஹாபிழ் மாணவர் ஒருவர் என்னிடம் கேட்டார். அதனைப் பெற்றுக் கொடுத்தேன். அப்போது வேறு என்ன வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். உம்றா செய்வதற்கான வாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரினார். அண்மையில் உம்றாவுக்கு நாங்கள் 38 பேரை அனுப்பினோம். அதில் அந்த மாணவரையும் அவருக்கு உதவியாக அவரின் தந்தையையும் உம்ராவுக்கு அனுப்பி வைத்தோம். மேலும் இரண்டு பார்வையற்ற ஹாபிழ்களும் அந்த குழுவில் இருந்தனர்.

அந்த ஹாபிழ்களில் ஒருவருடன் நான் பேசிய போது, 07 வயதில் ஓதத் தொடங்கியவர் ஒன்றரை வருடங்களில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து – ஹாபிழ் ஆகி விட்டதாகக் கூறினார். எவ்வாறு அதைச் செய்தீர்கள் என்று கேட்டேன். அவரின் அதிபரும் ஒஸ்தாதும் ஓதுவார்களாம், அதைக் கேட்டு தான் பாடமாக்கிக் கொண்டதாக அவர் கூறினார். சொல்வது இலகுவாக இருந்தாலும் பார்வையற்ற ஒருவர் குர்ஆனை மனனம் செய்வது இலகுவான விடயமல்ல.

எவ்வளவுதான் எங்களின் அந்தஷ்து உயர்ந்தாலும், எங்களுக்கென்று ஒரு மறுமை வாழ்வும் உள்ளது. அந்த வாழ்க்கைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

கொழும்பில் இவ்வாறான நிகழ்வொன்றை நாம் நடத்திய போது, அங்கு உரையாற்றிய ஒரு பேச்சாளர் கூறிய விடயமொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு பணத்தாளில் ஒரு பக்கமாக ஒரு தொகையும் அதன் மறுபக்கத்தில் வேறொரு தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தால், அதற்கு எந்தவித பெறுமதியும் இருக்காது. இரண்டு பக்கங்களிலும் ஒரே தொகை குறிப்பிடப்பட்டிருந்தால்தான் அதற்குப் பெறுமதி இருக்கும். அதேபோன்று, கல்வியும் அந்தஷ்தும் நம்மிடம் இருந்தாலும் – அதற்குச் சமாந்தரமாக ஒழுக்கமும் நம்மிடம் இருக்க வேண்டும். ஒழுக்கமற்ற கல்வியால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே கல்வியும் ஒழுக்கமும் உங்களிடம் சமாந்தரமாக இருக்க வேண்டும் என்று, மாணவர்களாகிய உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அவர் ஒதுக்கிய நிதியின் கீழ், இன்றைய நிகழ்வு நடைபெற்ற கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தது.

1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது, அங்கிருந்து வெளியேறிய றிஷாட் பதியுதீன் குடும்பத்தினர் – இன்றைய நிகழ்வு நடைபெற்ற கொத்தாந்தீவில் முதன்முதலாகக் குடியேறி, அங்கு சிலகாலம் வசித்தார்கள்.