பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான்
– ஆசிரியர் கருத்து –
பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த 48 வயதான பிரியந்த குமார தியவதன எனும் நபர், அங்கு கொடூரமாகத் தாக்கப்பட்டு – எரித்துக் கொல்லப்பட்டுள்ளமை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத காட்டுமிராண்டித்தனமான குற்றமாகும்.
இவ்வாறு கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவன என்பவர், கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தானிலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார் என, பிபிசி குறிப்பிட்டுள்ளது.
மேற்படி நபர் இஸ்லாத்துக்கு எதிராக – மத நிந்தனையில் ஈடுபட்டார் என, வெள்ளிக்கிழமை காலை தகவல் பரவியதையடுத்து, அவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக பிபிசி கூறுகிறது.
நபரொருவர் மத நிந்தனையில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இவ்வாறு காடையர்கள் அவர்களுக்கு விருப்பமான முறையில் நடந்துகொள்வதை ஏற்க முடியாது.
மேலும், மனித உயிரை இவ்வாறு கொல்வதற்கு – இஸ்லாம் எந்த விதத்திலும் அனுமதிக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
நாகரீகமான சமூகங்களின் மத்தியில் தனிநபர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கிணங்க இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் ஆபத்தானதாகும்.
மதத்தின் பெயரால்; ‘கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாகும்’ இவ்வாறான காவாலித்தனம் உலகில் எங்கு நடந்தாலும் அதற்குப் பெயர் ‘பயங்கரவாதம்’தான்.
இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொடூர நடவடிக்கை தொடர்பில், பாகிஸ்தான் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும், மதங்கள் கடந்து தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் – இந்தக் கொடூர நிகழ்வு குறித்து, இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளதோடு, பாகிஸ்தானியர்களாக தாம் வெட்கமடைவதாகவும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் சிங்கள மொழியில் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.
‘புதிது’ செய்தித்தளமும் இந்தக் காண்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது.
தொடர்பான செய்தி: பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்; 100 பேர் கைது: இம்ரான்கானின் நேரடி கண்காணிப்பில் விசாரணை