தலைப்புச் செய்திகள்

இலங்கையில் ஹெல்த் ATMகள் அமைக்க 225 மில்லியன் ரூபாய் இந்தியா நிதியுதவி

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கை மேற்கொண்டு வரும் மீட்சி நடவடிக்கைகளுக்கு, தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், இலங்கைக்கு 50 வைத்திய கூடங்களை (Medical Kiosks) வழங்குவதற்காக, 225 மில்லியன் ரூபாய் வரையிலான நிதியுதவியை அறிவித்துள்ளது. இவை ‘ஹெல்த் ஏடிஎம்’ (Health ATM) என்றும் அழைக்கப்படுகின்றன.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பைத் தொடர்ந்து இந்த உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்றுமுன்தினம் (11) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த வைத்தியக் கூடங்கள், குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் போதிய வைத்திய வசதிகள் இல்லாத பகுதிகளில், அத்தியாவசிய நோய் கண்டறியும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வசதிகள் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுவதுடன், அடிப்படை வைத்தியப் பரிசோதனைகளை எளிதாக்குவதன் மூலம், பொது வைத்தியசாலைகளின் பணிச்சுமையைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக – இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான உதவிகளின் ஒரு பகுதியாகவே, இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.