தலைப்புச் செய்திகள்

04 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த 03 பஸ்கள் மோதிய விபத்து: சாரதி கஞ்சா, மது பாவித்திருந்தார் என தெரிவிப்பு

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் மூன்று பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பஸ் சாரதி, விபத்தின் போது கஞ்சா மற்றும் மது அருந்தியிருந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளும் வைத்தியப் பரிசோதனைகளும் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் மேற்படி போதைப்பொருட்களை உள்ளெடுத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து 10 ஆம் திகதி, கண்டி – யாழ்ப்பாணம் (A9) வீதியில், ரம்பேவவில் உள்ள வெலி ஓயா சந்திக்கு அருகில் இடம்பெற்றது.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி மற்றும் இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும், 76 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜனகபுரவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்றும், அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மற்றுமொரு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது, ​​வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதால், மூன்று பஸ்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து நிகழ்ந்தது.