மந்தைத்தன மனநிலையிலிருந்து மீள்வோம்; உள்ளூராட்சி தேர்தலில் ஒழுக்கங் கெட்டவர்களைப் புறக்கணிப்போம்

🕔 January 5, 2023

– ஆசிரியர் கருத்து –

ள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு சமர்ப்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்கிற அனுமானங்களும் பரவலாக உள்ளன. இருந்தபோதும் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை கட்சிகள் தொடங்கியுள்ளன.

நாட்டில் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் அநேகமானவற்றில் சண்டியர்களும், ஒழுங்கங்கெட்டவர்களுமே பரவலாகக் காணப்படுகின்றனர்.

அவர்களை மக்கள்தான் தெரிவு செய்தனர். அரசியல் கட்சிகள் மீது கொண்ட பித்து நிலையினால், தமக்கு விருப்பமான கட்சி – யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அந்த நபருக்கு கண்களை மூடிக்கொண்டு வாக்களிப்போர்தான் நம்மிடையே அதிகளவில் உள்ளனர்.

நமது அரசியல் பிரதிநிதி – படித்தவராக, ஒழுக்கமுடையவராக, நாகரீகமானவராக இருக்க வேண்டுமென நாம் ஏன் ஆசைப்படக் கூடாது?

நாம் ஆதரிக்கும் கட்சி, எவரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு வாக்களிக்கும் மந்தைத்தன மனநிலையில் நம்மில் கணிசமானோர் இருப்பதனால், உள்ளூராட்சி சபைகளுக்கு ரௌடிகளும், ஒழுக்கங்கெட்டவர்களும் தெரிவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சண்டித்தனமும், காசும் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்கிற மனநிலை சமூகத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. இதனால், படித்தவர்களும் ஒழுக்கமானவர்களும் ‘குப்பை லொறி’க்கு ஒதுங்குவதைப் போல், அரசியல் என்றாலே தூரமாகி விடுகின்றனர்.

பிரதேச சபையின் தவிசாளர் ஒருவர் ‘எல்.ஈ.டி’ பல்ப் (LED Bulb) என்பதை சொல்லத் தெரியாமல், ஒரு மேடையில் ‘எல்.ரி.ரி.ஈ’ பல்ப் (LTTE) என்று கூறிய போது, அங்கிருந்தவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த கதைகளெல்லாம் உள்ளன.

படிக்காதவர்களை நமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்தால், இதனை விடவும் – பொது இடங்களில் அசிங்கப்பட நேரிடும். இந்த அவமானம் அந்தப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தவர்களுக்கும் போய்ச்சேரும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்தல் வேண்டும்.

எனவே, தற்போது உள்ளூராட்சித் தேர்தலில் களமிறக்கப்படுவோர் குறித்து கவனமாக இருங்கள். காடையர்கள், மடையர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள் – வேட்பாளர்களாக வந்தால் அவர்களை தயவுதாட்சண்யமின்றிப் புறக்கணியுங்கள்.

உங்கள் மரியாதையை நிரூபிக்கும் பொருட்டு, ஆகக்குறைந்தது இதனைத் தவிர – வேறு எதனையும் நீங்கள் செய்து விட முடியாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்