தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 200 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை: அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவு

சொத்துகளையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவுஈஸ்டர் தாக்குததல் சதித் திட்டத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் 15 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்ட கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய Trial-at-Bar அமர்வு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் 200 வருடங்களுக்கும் மேற்பட்ட சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளை, குற்றவாளிகள் அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யுமாறும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் முதல் குற்றவாளிக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையையும்; 2, 3, 4 மற்றும் 5-வது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 240 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும்; 6 மற்றும் 7-வது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 200 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும்; 8-வது குற்றவாளிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும்; 9 மற்றும் 10-வது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 220 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும்; 11 மற்றும் 15-வது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 200 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும்; முறையே 16, 18 மற்றும் 19-வது குற்றவாளிகளுக்கு 220, 220 மற்றும் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

269 பேரின் உயிரைப் பறித்த மற்றும் 500-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்திய ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பாக இது வழங்கப்பட்டது.

இருப்பினும், இத்தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற ஒன்பது பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த இவ்வழக்கில், மொத்தம் 2,309 அரசுத் தரப்பு சாட்சிகள் சாட்சியம் வழங்கினர்.

மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட அமர்வின் முன்னிலையில், நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்படத் தொடங்கியது. தீர்ப்பை வழங்கிய விசேட அமர்வு நீதிமன்றத்தின் (Trial-at-Bar) தலைவரும் மேல் நீதிமன்ற நீதிபதியுமான நவரத்ன மாரசிங்க, மிக நீண்ட தீர்ப்பின் மிக முக்கியமான பகுதிகள் மட்டுமே திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, ஒன்பது தொகுதிகள் மற்றும் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை பிரதிவாதிகளிடம் கையளிக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.