தலைப்புச் செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிர நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயை லஞ்சமாக வழங்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் – லக்மந்தி ஹெட்டியாராச்சியை கைது செய்தனர்.

தனது கணவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தனவுக்கு விதிக்கப்படவிருந்த சிறைத் தண்டனை தொடர்பான விவகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் நோக்கில், இந்த லஞ்சத்தை வழங்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதி அமைச்சர் குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது.