
– மாளிகைக்காடு செய்தியாளர் –
”முஸ்லிம் பெண் அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் ‘வைத்தியசாலை நிர்வாகம் சட்டத்தின்படியே செயற்படுகின்றது’ என்று சுமந்திரன், சாணக்கியன் போன்ற தமிழ் தலைமைகள் கூறியமை போன்று, அனோஜன் விடயத்தில், ‘சஊதி அரசும் அதன் சட்டங்களின்படியே செயற்படுகின்றது’ என முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறியிருக்கலாம். ஆனால், மனிதாபிமான அடிப்படையில் முஸ்லிங்கள் தலையிட்டு – அனோஜனின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என – முன்னாள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனையில் இஸ்லாமிய சமூக சங்கம் – நேற்று (26) சனிக்கிழமை மாலை நடத்திய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜனின் விடுதலைக்காக, முஸ்லிம் தலைமைகளிடம் தமிழ் தலைமைகள் வேண்டுகோள்களை விடுத்து வருகின்றமையை சுட்டிக்காட்டிய ஹரீஸ்; கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் தமது மதக் கடமையின் அடிப்படையில் தலையை மறைத்துச் செல்லும் விவகாரத்தில் எழுந்த பிரச்சினையின்போது, அதற்குத் தீர்வு காண – தமிழ் அரசியல் தலைமைகள் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை என்றார்.
முஸ்லிம் பெண்களின் கண்ணியத்துடனும் மதக் கடமையுடனும் தொடர்புடைய விடயங்களில், இலங்கையின் ஏனைய வைத்தியசாலைகளில் காணப்படும் நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஒரு வைத்தியசாலையில் மாத்திரம் பிரச்சினை எழுந்திருப்பது தொடர்பிலும் அவர் கவலை தெரிவித்தார்.
”கல்முனை மாநகரை நிர்வாக ரீதியாகப் பிரிக்க தமிழ் தலைமைகள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்த ஹரீஸ்; கல்முனை மாநகரத்தைப் பிரிப்பது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோரின் நிலைப்பாடு தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிலத்தொடர்புடையதாக, நியாயமானவையாக இருக்குமானால், அவை தொடர்பாக முஸ்லிம் தலைமைகளுடனும் சிவில் சமூகத்துடனும் கலந்துரையாடி தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
”முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிர்வாக ரீதியான மாற்றங்களை நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு முன்னர், தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகள் பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வைக் கண்டிருக்க முடியும். கடந்த கால யுத்த சூழ்நிலையில் இடம்பெற்ற தவறுகளை இன்றைய காலகட்டத்தில் மீண்டும் உருவாக்கக் கூடாது. உண்மையான நல்லிணக்கம் என்பது இரு சமூகங்களின் உரிமைகளையும் மதித்து முன்னெடுக்கப்படும் அணுகுமுறையிலேயே அமைய வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
‘தமிழ்–முஸ்லிம் பேரவை’ போன்ற கூட்டு முயற்சிகள் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கமாகக் கொண்டிருந்தால், இரு தரப்பினரின் நியாயமான பிரச்சினைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு நடவடிக்கை எடுத்ததைப் போன்று, கல்முனை வாழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையிலும் அவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார். அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் கல்முனை விவகாரம் தொடர்பாக அதிகளவில் கவலையுடுனு் பேசப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
”முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ்–முஸ்லிம் ஒற்றுமைக்காக முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் தடையாக இருக்க விரும்பவில்லை. ஹக்கீம், றிசாத் போன்றவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தை அணுகாமல், அந்த சமூகத்தின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் களத்தில் இறங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான அடையாளமாக விளங்கிவரும் கல்முனை மாநகரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் தீவிரமாகச் செயற்பட்டு, அந்த சமூகத்தின் உரிமைகளையும் இருப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கல்முனை மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் நீதியான தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே தனது முக்கிய வேண்டுகோள் என்றார்.



