தலைப்புச் செய்திகள்

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

லட்சியடம் காரணமாக பிரசவத்தின்போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில்’, திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஒருவரை சுகாதார அமைச்சு பணி இடைநீக்கம் செய்துள்ளது.

கடமையில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சின் செயலாளர் இந்த பணி இடைநீக்கத்திற்கு உத்தரவிட்டார்.

பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த துயரச் சம்பவத்தைக் காரணம் காட்டி, ஏப்ரல் 9 அன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

ஏப்ரல் 9 அன்று காலை சுமார் 8.45 மணியளவில், வைத்தியசாலையின் மகப்பேறு வார்டில் இருந்த ஒரு பச்சிளங்குழந்தை அவதிப்பட்டுள்ளது. அங்கிருந்த தாதி ஒருவர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தபோதிலும், முறையான வைத்தியக் கவனிப்பு வழங்கப்படவில்லை. மேலும் உத்தியோகபூர்வப் பொறுப்புகளும் புறக்கணிக்கப்பட்டன.

மேலும், வைத்தியர் பிரசவத்தில் பங்கேற்கத் தவறியதால், சிக்கல்களைத் தடுக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. தாய்க்கு காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தபோதிலும், வைத்திய சிகிச்சை அளிக்கப்படவில்லை.

கடந்த காலங்களிலும் இது போன்ற கடமை முறைகேடுகள் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டதுடன், செயலாளர் வெளியிட்ட கடிதத்தில் இவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த முறைகேட்டைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு உறுதிப்படுத்தியது.

தவறு செய்த வைத்தியர், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றும் ஒரு விசேட வைத்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.