
அமெரிக்காவின் 14 அம்ச முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதில் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஊடாக 14 அம்சங்கள் கொண்ட ஒரு முன்மொழிவை ஈரானுக்கு அமெரிக்கா அனுப்பியது. அதில், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கக் கூடாது என்றும், குறைந்தது 12 ஆண்டுகளுக்கு அனைத்து யுரேனியம் செறிவூட்டலையும் நிறுத்த வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட, தனது கையிருப்பில் உள்ள சுமார் 440 கிலோ (970 பவுண்ட்) யுரேனியத்தையும் அது ஒப்படைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்தது.
இதற்கு ஈரான் நேற்று பதில் அனுப்பியது. அதில், பிராந்தியம் முழுவதும், குறிப்பாக லெபனானில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், அமெரிக்காவுடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதிலும் முதலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என, ஈரான் குறிப்பிட்டிருந்தது.
வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ‘கடல்சார் பாதுகாப்பை’ உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் ஈரான் கோரியிருந்தது.
ஈரானின் பதில் குறித்து ட்ரம்ப் கூறுகையில்; “ஈரானின் ‘பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களின் பதிலை நான் இப்போதுதான் படித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை — முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் தனது ட்ரூத் சோசியல் தளத்தல் பதிவொன்றை வெளியிட்ட ட்ரம்ப்; ‘ஈரான், கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவுடனும் உலகின் பிற நாடுகளுடனும் விளையாடி வருகிறது. இனி அவர்களால் சிரிக்க முடியாது’ என குறிப்பிட்டிருந்தார்.


