
– நூருல் ஹுதா உமர் –
முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம் காங்கிரஸால் எந்த விதப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து, அந்தக் கட்சியிலிருந்து விலகி விட்டதாக, அந்தக் கட்சியின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. எஹ்யாகான் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் தராத, முஸ்லிம்கள் இழந்த காணிகளை மீட்க திராணியற்ற, கல்முனை நகர அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தான் செயலாளர் நாயகமாகப் பதவி வகிக்கும் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயத்தை சாய்ந்தமருதில் திறந்து வைத்த பின்னர் – நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “என்னுடைய பிரதிப்பொருளாளர் பதவி அடங்கலாக கட்சியின் பதவிகளை துறந்தமையை அறிவிக்காமலேயே அங்கிருந்து வெளியேறியுள்ளேன். கட்சியிக்கு அறிவிக்கும் அளவுக்கு அங்கு ஒரு கட்டமைப்பு இல்லை. கட்சியின் செயலாளராக ஹசனலி இருந்தபோது – செயலாளர் பொறுப்பு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. இப்போது அப்படி எதுவும் இல்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் அமைச்சராக இருந்தும் கல்முனைக்கு எவ்வித அபிவிருத்திகளும் நடக்கவில்லை. கல்முனையை அபிவிருத்தி செய்ய முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் எடுத்த எத்தனங்களை கட்சியில் உள்ளவர்களால் தடுக்கப்பட்டது.
கடந்த பொதுத்தேர்தலிலும் முன்னாள் அமைச்சர் ஹரீஸுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கினால், தாங்கள் தோற்று விடுவோம் என்பதற்காகவே, ஹரீஸுக்கு முஸ்லிம் காங்கிரஸில் உள்ளவர்களால் சதி செய்யப்பட்டு – அவர் தேர்தலில் களமிறங்காமல் தடுக்கப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸில் மக்களையும் சமூகத்தையும் பற்றி சிந்தித்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். அல்லது வெளியேற்றப்படுகிறார்கள்.
கூஜா தூக்கிகளுக்கு சாமரம் வீசும் வேலையை செய்வதையே முஸ்லிம் காங்கிரஸ் தலையாய கடமையாக கொண்டுள்ளது. இதனால்தான் மக்கள் அவர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் இன்னும் பல பாரம்பரிய கட்சிகளையும் நிராகரித்து தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரண்டார்கள்.
நாங்களும் தற்போதைய ஆளும் தரப்பினருக்கு தேவையாயின் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம். எங்கள் தொகுதிக்கு ஆளும் தரப்பின் ஊடாக கிடைத்த தேசிய பட்டியல் எம்.பிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம். எங்களுடன் ஒன்றாக இருந்த துரோகிகள் எங்களை பல இடங்களில் காட்டிக்கொடுத்து பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் திருகோணமலை உட்பட இன்னும் சில மாவட்டங்களிலும் நாங்கள் களமிறங்க தயாராகி வருகிறோம் என்றார்.
ஐக்கிய மக்கள் காங்கிரஸின் தலைவராக முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே பதவி வகிக்கின்றார்.

தொடர்பான வீடியோ:



