
பளையிலுள்ள வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் பயிற்சி முகாம் ஒன்று செயல்படுவதாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (18) தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; சமூக ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் விடுதலைப் புலிகளின் முகாமோ அல்லது பயங்கரவாதப் பயிற்சி மையமோ இல்லை என்று கூறினார்.
உண்மையில் நடந்தது என்னவென்றால், ஒரு தனிநபர் வனப் பகுதியில் ஒரு இடத்தை அனுமதியின்றி அழித்து, அதில் ஒரு பல அடுக்கு கட்டிடத்தைக் கட்டியுள்ளார். இதுவரை திரட்டப்பட்ட தகவல்களின்படி, அந்த இடத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பங்களிப்புடன், ஓர் ஆடை உற்பத்தித் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வனத்தை அனுமதியின்றி அழித்ததற்காக அந்த தனிநபர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த மேலும் கூறினார்.
1919 நொவம்பர் 17 திகதிஜயிட்ட வர்த்தமானி எண் 70/64-இன் கீழ், இப்பகுதி வனக் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2025-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் அனுமதியின்றி காடுகள் அழிக்கப்படுவதாக அறிக்கைகள் வந்துள்ளன.
2026 ஜனவரியில் மூன்று மாடிக் கட்டிடம் கட்டுவது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்த அறிக்கைகள் தற்போது அந்தக் கட்டிடம் நான்கு மாடிகளைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றன. இந்தச் செயல்பாடுகள் தொடர்பாக வனப் பாதுகாப்பு அலுவலகம் பல சோதனைகளை நடத்தியுள்ளது. அதன் விளைவாக உரிமையாளருக்கு எதிராக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சரின் கூற்றுப்படி, அந்த நபர் ஆரம்பத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தை அழித்து, பின்னர் அழிக்கப்பட்ட பகுதியை சுமார் 20 ஏக்கராக விரிவுபடுத்தியுள்ளார். அங்கு கற்றாழை மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 2026 பெப்ரவரி 06 அன்று, அந்த நிலத்திற்குள் நுழைவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை நீக்கக் கோரி பெப்ரவரி 17 அன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அந்தத் தடை இன்னும் நடைமுறையில் உள்ளது. அடுத்த நீதிமன்ற விசாரணை ஓகஸ்ட் 25 அன்று நடைபெற உள்ளது.
ட்ராக்டர்கள் மற்றும் பிற இயந்திரங்களைப் பயன்படுத்தி அனுமதியின்றி மணலை அகழ்ந்து கொண்டு சென்றது தொடர்பாக, பொலிஸார் ஒரு தனி வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
2026, ஜூலை 24 அன்று, வனத்துறை அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடையூறு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அந்த நிலத்தில் உள்ளவரும்’, மேலும் எட்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை விசேட அதிரடிப் படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பிற்காலத்தில் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.
அந்த நிலத்திற்கான உரிமை கோரி – அதைக் கைப்பற்றியுள்ளவர் நீதிமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் செயல்படுவதாகக் கூறி, பொய்யான செய்திகளைப் பரப்பியவர்கள் மீது – தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.



