தலைப்புச் செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒளிப்பதிவாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் – நேற்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ‘சிரச’ தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஒளிப்பதிவாளரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்ததாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேறிக் கொண்டிருந்தபோது, ​​நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

குறித்த பாதுகாப்பு அதிகாரி இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக, நேற்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டிருந்தபோது அவர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அக்கட்சி மேலும் குறிப்பிட்டிருந்தது.

நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்தனவா என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது.

தொடர்பான செய்தி: ரணிலுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி மீது கமராமேன் தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு