
அரச ஊழியர்களின் சம்பளத்துக்காக மட்டும் ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் (90,000 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாக,சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், நான்கு சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த 223 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கியபோது இந்த விடயத்தைக் கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகள் உள்ளிட்ட இத்தகைய செலவுகள் அனைத்தும் – மக்களிடமிருந்து அறவிடப்படும் வரி வருவாயின் மூலமே ஈடுகட்டப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
எனவே, பொது நிதியைப் பயன்படுத்துவதில் தெளிவான புரிதலுடனும் பொறுப்புக்கூறும் தன்மையுடனும் தமது கடமைகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு – ஒவ்வொரு அரச ஊழியருக்கும் உண்டு என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த மாத இறுதிக்குள் சுகாதாரத் துறையில் ஆரம்ப நிலை மருத்துவ உத்தியோகத்தர்கள் (Medical Officers) 1,600 பேர் புதிதாகச் சேர்க்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களும் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சம்பளத் திருத்தங்களின் பலன்களைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.
இதன்படி, அடிப்படை சம்பள உயர்வு ஜனவரி மாதம் முதல் – நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், படிகளுக்கான உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



