
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய வாகனத்தை, தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி – அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த நிதியத்திற்கு (Consolidated Fund) 6.6 மில்லியன் ரூபாயை செலுத்துமாறு பௌசிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் ரூ. 1,664,334 ரூபாய் 93 சதத்தை, ஒரு மாதத்திற்குள்ளும், மீதித் தொகையை இரண்டு மாதங்களுக்குள்ளும் செலுத்த வேண்டும்.
அந்த வாகனத்தின் புகைப்படத்துடன் கூடிய அரைப் பக்க மன்னிப்புக் கோரும் விளம்பரத்தை ‘சிலுமின’, ‘சண்டே ஒப்சேர்வர்’ மற்றும் ‘தினகரன்’ ஆகிய பத்திரிகைகளின் – முதல் பக்கங்களில் ஒரு மாதத்திற்குள் வெளியிடுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்ன – இந்த மனு தாக்கல் செய்திருந்தார்.



