
– பாறுக் ஷிஹான் –
அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறித் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை, விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் பதவி வகித்த காலத்தில், அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதியளித்து, அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குறித்த பெண் அண்மையில் சமூக ஊடகத்தில் நேரலை ஊடாக தெரிவித்திருந்தார். அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் அப்பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினர், அவரை உடனடியாகக் கைது செய்தனர்.
அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில், அவரை ஓகஸ்ட் 19 ஆம் திகதி (அதாவது இன்று) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான, ஏ.எல்.எம். அதாஉல்லாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



