
நாடாளுமன்றத்தில் இன்று (18) தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம், உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை 63-லிருந்து 65 ஆகவும் உயர்த்தவுள்ளது.
இந்தத் திருத்தத்திருள்ள விதிகள் சர்ச்சைக்குரியவை என்றும், அதன் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்து ஒரு தீர்மானத்தைப் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருக்கிறது.
அரசியலமைப்பில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அடிப்படையில் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி கூறியுள்ளது.
மனுவில், பதவியில் இருக்கும் நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாற்றுவது நீதித்துறை சுதந்திரம், அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் இறையாண்மை ஆகியவற்றைப் பாதிக்கிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் விதிமுறையானது அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது என்றும், நாடாளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் இல்லாமல் – அது சட்டமாக முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



