
– பாறுக் ஷிஹான் –
போதைப்பொருளுடன் அண்மையில் கைதான சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை மாவட்டத்தில் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (17) கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சாய்ந்தமருதுது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆவர்.
கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் – ஹசன் மௌலானா அனுஹர் ஆகியோராவர்.
கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகவும் கடமையா வருகிறார். அவர் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
என்ன நடந்தது?
கடந்த ஓகஸ்ட் 14ஆம் திகதி, 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் ஓகஸ்ட் 15 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
இதன்போது, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் பிரகலதன், ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பான உண்மைகளை ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல், சாதாரணக் குற்றப்பத்திரிகை மூலம் மட்டுமே சமர்ப்பிப்பதற்குச் சம்மதித்து, அதற்காகச் சந்தேகநபரிடம் 20,000 ரூபா லஞ்சம் கோரியுள்ளார்.
கையும் களவுமாகச் சிக்கிய அதிகாரி
இதனைத் தொடர்ந்து, குறித்த பணத்தை வழங்குவதற்கு சந்தேகநபர் ஒப்புக்கொண்டதையடுத்து, பணத்தை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பணத்தைப் பெறும் சந்தர்ப்பத்தில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதன் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகக் கடமை நிமித்தம் சென்றிருந்தார்.
அவர் வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸ் சார்ஜன்ட் அனுஹார் பணத்தைப் பெறச் சென்றபோது, அங்கு தயார் நிலையிலிருந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதனும் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் இணைந்துகொண்ட இவ்விரு அதிகாரிகளும், கைது செய்யப்பட்ட பின்னர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளர்.



