தலை குனிவு

🕔 June 18, 2017

– ஆசிரியர் கருத்து –

முஸ்லிம்களின் தனிப்பட்ட நடத்தைகளையெல்லாம் வைத்து, இஸ்லாத்தை மட்டிடக் கூடாது என்று, முஸ்லிம் மார்க்க அறிஞர்களே கூறுவதுண்டு.

சீரிய ஒழுக்க முறையினை இஸ்லாம் போதித்துள்ள போதும், அந்த மார்க்கத்தினைப் பின்பற்றும் எல்லோரும், இஸ்லாம் சொல்லித்தரும் ஒழுக்கங்களை போதுமானளவு கூடப் பின்பற்றுவதில்லை.

இது நோன்பு மாதம், பாவச் செயல்களிலிருந்து முடிந்த வரை ஒதுங்கியிருப்பதற்கே, முஸ்லிம்கள் முயற்சிப்பதுண்டு.

ஆனால், இந்த நம்பிக்கையை சில செய்திகள் சிதைத்து விடுகின்றன.

நோன்பு ஆரம்பித்ததில் இருந்து இன்றைய தினம் வரை, குடி போதையில், வாகனங்களைச் செலுத்தி விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் குடி வெறியில் சண்டையில் ஈடுபட்டு காயமடைந்தவர்கள் என, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பலர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இதில் திகைப்புக்கும், கவலைக்குமுரிய விடயம் என்னவென்றால், மேற்படி நபர்களில் அதிகமானோர் அதாவது 10க்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள் என்று கூறப்படுகிறது.

போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் கடுமையாக தடுத்துள்ளது. அவ்வாறான மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களில் ஒரு தொகையினர், புனித நோன்பு மாதத்திலும் மது அருந்துகிறார்கள் என்பது வெட்கக் கேடான விடயமாகும்.

மேற்படி 10 பேரும் வைத்தியசாலைக்கு வந்தமையினால் அடையாளம் காணப்பட்டனர். ஆனால், இன்னும் கணிசமானோர் ‘முஸ்லிம்கள்’ எனும் அடையாளத்துடன் போதைப் பாவனையில் தெரிந்தும், தெரியாமலும்  ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் குறித்து இஸ்லாமிய அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும். மார்க்கப் பணி செய்கிறோம் எனக் கூறிக் கொண்டு, ஒழுங்காக இருப்பவர்களிடம் போய் உபதேசம் செய்வதை உதறி விட்டு, மேற்சொன்ன போதைப் பாவனையாளர்கள் போன்ற நபர்களை நோக்கி மார்க்கப் பணியாளர்கள் நகர வேண்டும்.

இஸ்லாத்தை உரிய முறையில் சொல்லி, அவர்களை போதைப் பாவனையிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடக்கும் அதேவேளை, சிகிச்சைகள் மற்றும் உளவளப் பயிற்சிகளையும் சம்பந்தப்பட்ட போதைப் பாவனையாளர்களுக்கு வழங்குதல் அவசியமாகும்.

இது போன்ற விவகாரங்களில் மார்க்கப் பணியாளர்களும், சமூக அக்கறையாளர்களும் உடனடிக் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இல்லா விட்டால், முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக தலை குனிய வேண்டி வரும்.

Comments