
நாளை (14) நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் இயற்பியல் (Physics) பாடத்தின் முதலாவது வினாத்தாள் அடங்கிய 06 பொட்டலங்கள், இன்று (13) அம்பலாந்தோட்ட-இலுள்ள பரீட்சை நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கல்வி அமைச்சு இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாகச் செயல்படும் அம்பலாந்தோட்ட பாடசாலை ஒன்றில், வினாத்தாள் வைக்கும் பெட்டியொன்றுக்குள் மேற்படி பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று நடைபெற்ற இசை, நடனம் மற்றும் விவசாயம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொட்டலங்களுக்கு மத்தியில், இயற்பியல் பாடத்தின் முதல் வினாத்தாள்கள் அடங்கிய 06 பொட்டலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும், இயற்பியல் வினாத்தாள்கள் அடங்கிய பொட்டலங்கள் திறக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக குமாரி லியனகே தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் க.பொ.த உயர்தர பரீட்சை நடத்தப்பட்டு வரும் நிலையில், அம்பலாந்தோட்டை பரீட்சை நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.



