
மகசின் சிறையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்தார்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையின் போது, நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

“11 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தப்படாததால், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை தேவைப்படுகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் அரச ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“போதைப்பொருள் அடங்கிய ஒரு பொட்டலம் கண்டறியப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கையுமே இந்தக் கலவரத்திற்கான உடனடித் தூண்டுதலாகத் தெரிகிறது. இது அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிரான ஒரு எதிர்வினை என்பது தெளிவாகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
“மகசின் சிறையில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தில் சுமார் 40 கைதிகள் ஈடுபட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, வெளிப் பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைக்குள் பார்வையாளர்கள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.


