
– பாறுக் ஷிஹான் –
‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) எனஅழைக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரைக் கண்டால் கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து பிற மாடிகளுக்குப் பாய்ந்து தப்பிச் செல்வதால், அப்பகுதி மக்களால் இந்தப் பெண் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
கல்முனைக்குடி – கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் நீண்டகாலமாக ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (13) மாலை அதிரடி சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண் பொலிஸாரின் உதவியுடன் பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று மேற்படி பெண்ணை கைது செய்த போது, அவரிடம் 2,310 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
தொடர்ச்சியாக மாடிகளில் இருந்து குதித்ததால் – குறித்த பெண்ணின் கால் உடைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



