தலைப்புச் செய்திகள்

திருகோணமலையில் தேன்மொழி, டெல்ஷியா ஆகியோர் 2008இல் காணாமல் போனமை தொடர்பில், கடற்படையின் முன்னாள் இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் கைது

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டில் சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய இரு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படையின் முன்னாள் பெண் உத்தியோகத்தர்கள் இருவரை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று (20) கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் முன்னாள் கடற்படை பெண் உத்தியோகத்தர்களான தீபா சந்தமாலி மற்றும் அருணி கவ்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (21) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

கேகாலை பகுதியைச் சேர்ந்த சாந்தா என்ற நபர் அலவ்வ பகுதியில் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போன சம்பவம் தொடர்பான மற்றொரு வழக்கிலும், இந்த இரு பெண் உத்தியோகத்தர்களையும் முன்னர் சிஐடி கைது செய்தது. அந்த வழக்கு தொடர்பாக அவர்கள் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சாந்தா காணாமல் போன வழக்கு தொடர்பான பிணை நிபந்தனைகளின்படி கையொப்பமிடுவதற்காக சிஐடி-யில் ஆஜரானபோது, இந்த புதிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா காணாமல் போனது தொடர்பான தனி விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சாந்தா காணாமல் போனது குறித்த விசாரணையின் போது, ​​திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் ‘கன் சைட்’ (Gun Site) என்று அழைக்கப்படும் ரகசிய தடுப்பு முகாமில், நபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அந்த ரகசிய தடுப்பு முகாம் குறித்த விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த முன்னாள் கடற்படை பெண் உத்தியோகத்தர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

Gun site பகுதி