தலைப்புச் செய்திகள்

அனோஜன் விவகாரம்; சவூதி மன்னருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்: றிஷாத் தெரிவிப்பு

வூதி அரேபியாவில் தண்டனை பெற்றுவரும், சிவராசா அனோஜன் வழக்கு தொடர்பில் கருணை அடிப்படையிலான பரிசீலனையையும் மன்னிப்பையும் கோரி, சவூதி அரேபிய மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் அல் சவூத்-இடம் சமர்ப்பிக்கப்படவுள்ள மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணியை தாம் ஆரம்பித்துள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளா்.

இது தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU), தேசிய ஷூரா சபை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் ஆகியவற்றுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவராசா அனோஜனின் வழக்கில் தங்களது ஆதரவை வழங்குவதுடன், இலங்கையில் உள்ள சவூதி அரேபிய ராச்சியத்தின் தூதரகம் ஊடாக – சவூதி அரேபியாவின் மன்னரிடம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுத்து, அனோஜன் வழக்கை கருணையுடன் பரிசீலிக்குமாறு கோருமாறும் கேட்டுக்கொள்வதாகவும், றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிவராசா அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக சாத்தியமான அனைத்து வழிகளும் முன்னெடுக்கப்படும் என நாம் உண்மையுடன் நம்புகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார.