
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்ன தொடர்பான இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை குறித்து, பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் 10 ஊழியர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நீதிமன்றத்திலிருந்து கோப்புகள் எவ்வாறு காணாமல் போயின என்பதை புலனாய்வாளர்கள் கண்டறிய முயன்று வருவதாக, பாணந்துறை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா கூறியுள்ளார்.
செப்டம்பர் 01ஆம் திகதி நீதிமன்றப் பதிவாளர், பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரிடம் வழங்கி முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெறுகிறது.
காணாமல் போன கோப்புகள், குடு சலிந்துவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு கொலை வழக்கு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தனி பணமோசடி வழக்கு தொடர்பானவை என, பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த வழக்குகளில் ஒன்று தொடர்பாக – நீதிமன்றத்திடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்த நிலையில், இந்தக் கோப்புகள் காணாமல் போனமை வெளிச்சத்திற்கு வந்தது. காணாமல் போன ஆவணங்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்கு ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணக் காப்பகத்தில் வைப்பதற்கு முன்பு, கோப்புகள் நகல் எடுப்பதற்காக ஓர் அலுவலக உதவியாளரிடம் கொடுக்கப்பட்டிருந்ததாக – முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கோப்புகளை யார் கையாண்டிருக்கலாம் மற்றும் அவை எப்போது காணாமல் போயின என்பதைக் கண்டறிய, நீதிமன்ற வளாகத்தின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



