
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 45 சந்தேக நபர்கள் சார்பாக, மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்களைத் தாக்கல் செய்த 02 நபர்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார, உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் முறையே வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நிமல் கருணாதிலக மற்றும் அந்தோணி அலெக்சாண்டர் ஆவர்.
இந்த 02 நபர்களும் இதை ஒரு தொழிலாகச் செய்து வருவதாக பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45 சந்தேக நபர்களுக்கான பிணை மனுக்கள், ஒரே சட்டத்தரணி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேக நபர் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பாக, நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளிலிருந்து இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.



