தலைப்புச் செய்திகள்

மத்திய கிழக்கு மற்றும் ஜப்பான் நாடுகளில் வேலை வாய்ப்பு: பட்டதாரிகள் இலவசமாக செல்லலாம்

ப்பான் மற்றும் மத்திய கிழக்கில் – சலுகைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

துபாயில் உள்ள விமான நிலைய கட்டுமானத் திட்டங்களில் தற்போது 2,000 வேலைகள் உள்ளன என்றும், விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக ரூ. 1,50,000 செலவில் விரைவாக வேலைவாய்ப்பைப் பெறலாம் என்றும், பணியகத்தின் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும் 800 மேற்பார்வைப் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், அதற்கான செலவுகள் ரூ. 1,80,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தத் தொகையானது’ – அனைத்தும் உள்ளடக்கியவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை பட்டதாரிகள் – ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு நல்வாழ்வு மையத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. அதற்கான அனைத்து செலவுகளையும் அந்த நிறுவனமே ஏற்கும்.

ஜப்பானில் உள்ள மூன்று நிறுவனங்களுடன் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து செயல்படுவதாகவும் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

ஒரு ஜப்பானிய கட்டுமான நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ் 23 மாணவர்கள் சப்புகஸ்கந்தவில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஜப்பானிய மொழி ஆகிய இரண்டிலும் பயிற்சிக்கு நிதியுதவி அளிப்பதுடன், வேலை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மேலும், ஜப்பானிய நிறுவனமான மெட்டா டெக்னோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் பணியகம் கையெழுத்திட்டுள்ளது. இது, அடிப்படை ஜப்பானிய மொழித் திறன் கொண்ட தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகளைத் திறந்துள்ளது.

இதற்கிடையில், மற்றொரு ஜப்பானிய நிறுவனம், பாடசாலைப் படிப்பை முடித்தவர்களுக்கு லொரி சாரதிகளா 1,000 வேலைகளை வழங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன உரிமம் மற்றும் ஜப்பானிய மொழித் திறன் பெற்றிருக்க வேண்டும். தேவைப்பட்டால், இந்தத் தகுதிகளைப் பெற விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதாக பணியகம் கூறியுள்ளது.

இந்த வாய்ப்புகள் குறித்த விவரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் கிடைக்கின்றன.