
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் – தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவைத் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலேயின் உடல்நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (02) உத்தரவிட்டார்.
சுரேஷ் சாலேவுக்கு தொடர்ச்சியான உள்நோயாளர் சிகிச்சை தேவையா அல்லது அவரை விடுவிக்க முடியுமா என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுரேஷ் சாலே மூன்று மாதங்களுக்கும் மேலாக தேசிய வைத்தியசாலையில் தங்கியிருப்பதால், புலனாய்வாளர்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய இயலவில்லை என்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா நீதிமன்றில் தெரிவித்தமையினால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சுரேஷ் சாலேயுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதாகவும் ஓஸ்வால்ட் பெரேரா குறிப்பிட்டார்.
சுரேஷ் சாலேயின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டததரணி ஷவீந்திர பெனாண்டோ, வைத்தியசாலை அறிக்கைக்கான கோரிக்கையை எதிர்க்கவில்லை. ஆனால் சுரேஷ் சாலேயின் உடல்நிலை குறித்து வைத்தியர்கள் ஏற்கனவே அறிவுறுத்திவிட்டதாகவும், தனது கட்சிக்காரர் வாக்குமூலம் அளிக்கத் தகுதியுடன் இருந்தபோதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்ய முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.
சுரேஷ் சாலேயைப் பரிசோதிப்பதற்காக – முன்னர் ஒரு வைத்தியர் குழு நியமிக்கப்பட்டிருந்ததையும் அவர் நீதிமன்றத்திற்கு நினைவூட்டினார்.
வைத்தியர்கள் குழுவிடமிருந்து அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்பதைக் கவனித்த நீதிபதி, புதிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு சந்தேக நபர்களும் செப்டம்பர் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு செப்டம்பர் 15 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.



