தலைப்புச் செய்திகள்

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

– பாறுக் ஷிஹான் –

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பஸ் வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, கல்முனை நீதிவான் நீதிமன்றம்  நேற்று திங்கட்கிழமை (06)   அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   சோதனை நடவடிக்கையில் சிக்கிய   மூவருக்கும் தலா 120,000 ரூபா வீதம், மொத்தம் 3,60,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்முனை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி   தலைமைப் பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த விசேட வாகன சோதனையின் போதே, இந்த பஸ் வண்டிகள்  முற்றுகையிடப்பட்டன.

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோதமா முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக, கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகள்  தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.