தலைப்புச் செய்திகள்

நீதிமன்றத்தில் அம்பலமான கோட்டாவின் பொய் தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அசாத் மௌலானாவுடன் இருப்பதாகக் கூறப்படும் புகைப்படங்கள், திங்களன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும் உத்தரவு கோரி, கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையின் போது, ​​ இந்தப் படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் தொடர்பாக, தன்னைக் கைது செய்ய முயற்சி நடப்பதாகக் கூறி, கோட்டாபய ராஜபக்ஷ – இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மூலம், தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை, அவர் கோருகிறார்.

மேலும், அத்தகைய கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அவர் வாதிடுகிறார்.

எதிர் தரப்பினர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், கோட்டாபய ராஜபக்ஷவின் மனுவில் அவருக்கு ஆசாத் மௌலானாவைத் தெரியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், இனியபாரதி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில், 2019ஆம் ஆண்டில் மிரிஹானவில் உள்ள கோட்டபய ராஜபக்ஷவின் இல்லத்தில், ஆசாத் மௌலானா மற்றும் பலரும் உடனிருந்த நிலையில் அவரைச் சந்தித்ததாக இனியபாரதி கூறியதாக அவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ராஜபக்சவும் மௌலானாவும் ஒன்றாக இருப்பதைக் காட்டுவதாகக் கூறி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

தனக்கு ஆசாத் மௌலானாவைத் தெரியாது என்கிற கோட்டாபய ராஜபக்ஷவின் கூற்றுக்கு, இது முரணாக இருப்பதாகவும், அவர் நீதிமன்றத்தில் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வெளியிடத் தவறிவிட்டார் என்பதை இது நிரூபிப்பதாகவும் அவர் வாதிட்டார்.

மேலும், இந்த மனு முதன்மையாக தனிநபர் சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பானது என்றும், எனவே அரசியலமைப்பின் கீழ் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகார வரம்பைக் கொண்ட உச்ச நீதிமன்றத்திற்கு – இது அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அந்தப் புகைப்படங்கள் எந்தவொரு குற்றச் செயலையும் நிரூபிக்கவில்லை என்று வாதிட்டார்.

அரசியல்வாதியாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, பல ஆண்டுகளாக மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட ஏராளமான பொதுப் பிரமுகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் என்றும், ஒரு புகைப்படத்தில் ஆசாத் மௌலானா இருந்ததை மட்டும் எந்தவொரு குற்றத்திலும் அவர் ஈடுபட்டதற்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆசாத் மௌலானாவின் பகிரங்கக் குற்றச்சாட்டுகளுக்கு முன்னும் பின்னும் அமைக்கப்பட்டவை உட்பட, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றவாளியாக்கவில்லை என்றும் டி சில்வா மேலும் வாதிட்டார்.

அவரைக் கைது செய்வதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் வலியுறுத்தினார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் மேலதிக வாதங்களுக்காக இந்த வழக்கை ஜூலை 09 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.