தலைப்புச் செய்திகள்

காருக்குள் கண்டெடுக்கப்பட்ட வைத்தியரின் உடல்; பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்: பிரேத பரிசோதனை சொல்வது என்ன?

தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் – அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரிந்த 34 வயதான இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஷம்யா தர்ஷனி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கண்டி – கன்வொருவ பகுதியில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான அப்பெண்ணின் காதலன், அவரின் சடலத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்று, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கைவிட்டுவிட்டு, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

இறந்தவரின் சகோதரரான தலாவ – கொட்டா வெவ பகுதியைச் சேர்ந்த நபர், தனது சகோதரி நுவரெலியாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்ததாகவும், பல நாட்களாக சாப்பிடவில்லை என்று தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறி, ஜூன் 17 அன்று நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டன.

அந்த இடத்தை சோதனையிடுமாறு அவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, நுவரெலியா பொலிஸார் – சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்குச் சென்று தோதனையிட்டனர். ஆனால் உள்ளே யாரும் இருக்கவில்லை.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை (16) இரவு சுமார் 9.50 மணியளவில், சந்தேக நபர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்து சுமார் 40 நிமிடங்கள் அங்கேயே இருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டின.

பின்னர், இரவு சுமார் 10.30 மணியளவில் அவர் மயக்கிய நிலையில் இருந்த பெண்ணைத் தூக்கிக்கொண்டு – காரில் புறப்பட்டுச் செல்வதை அந்தக் காட்சிகள் காட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன பெண் குறித்து – நுவரெலியா பொலிஸார் – மற்ற பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்திருந்த நிலையில், தெல்தெனி பொலிஸ் நிலையப் பொறுப்பாளருக்கு, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் பெண்ணின் சடலம் இருப்பதாக தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார், முன் இருக்கையில் கருப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதைக் கண்டனர். பூட்டப்பட்டிருந்த வாகனத்தை வலுக்கட்டாயமாகத் திறந்து, பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

இறந்தவர், நுவரெலியாவிலிருந்து காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட அதே பெண் என்பதை அடுத்தடுத்த விசாரணைகள் உறுதிப்படுத்தின.

34 வயதான ஷம்யா தர்ஷனி, அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்து வந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பாதிக்கப்பட்டவரின் காதலன் சடலத்தை வாகனத்தில் கொண்டு சென்று, அந்த இடத்தில் கைவிட்டுச் சென்றதுடன், தெல்தெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தகவல் தெரிவித்ததாகக் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரும் சந்தேக நபரும் சுமார் எட்டு மாதங்களாகக் காதலித்து வந்ததாகவும், கனடாவிற்கு ஒன்றாகக் குடிபெயரும் நோக்கத்தில் அப்பெண் ஒரு வங்கி மற்றும் பல தனிநபர்களிடமிருந்து சுமார் 15 மில்லியன் ரூபாய் கடன் வாங்கி, அந்தப் பணத்தைத் தனது காதலனிடம் கொடுத்ததாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கோரியதாலும், திட்டமிடப்பட்ட வெளிநாட்டுக் குடிபெயர்வு நிறைவேறாததாலும், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர் ஜூன் 3 அன்று நுவரெலியாவில் உள்ள குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார்.

இதற்கிடையில், அவர் தனது சகோதரரைத் தொலைபேசியில் அழைத்து, மூன்று நாட்களாகத் தான் சாப்பிடவில்லை என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள ஒரு மனநல வைத்தியரைத் தொடர்புகொண்டு, தனக்குக் கடுமையான மன உளைச்சல் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து அருகிலுள்ள வைத்தியசாலையில் உடனடியாக மனநல சிகிச்சை பெறுமாறு அந்த வைத்தியர் அவரைஅறிவுறுத்தியிருந்தார்.

இருப்பினும், ஜூன் 16 அன்று மாலை சுமார் 4.00 மணிக்கு மேல், அவரது கைத்தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அவரின் சகோதரர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் உடலைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கார், அம்பாறை பகுதியில் வசிக்கும் மற்றொரு பெண்ணுக்குச் சொந்தமானது என்றும், அந்தப் பெண் – சந்தேக நபருடன் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, முடிவு செய்யப்படாத தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் கொலையா அல்லது வேறு காரணத்தினாலா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்கான முயற்சிகளை பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.