
ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, சவூதி அரேபியா மற்றும் கத்தார் உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளில் – உக்ரேன் குழுக்கள் களத்தில் இருப்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானங்களை இடை மறிக்கும் ஆயுதங்களில் தனது நாடு – நன்கு தேர்ச்சி பெற்றுள்ளது என்றும், ஏனெனில் ரஷ்யா தனது போரின் போது இவற்றை பயன்படுத்தியுள்ளது என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சின் ‘லெ மாண்ட்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில்; “மத்திய கிழக்கிலுள்ள தனது தளங்களைப் பாதுகாப்பது குறித்து – அமெரிக்காவும் உக்ரேனுடன் தொடர்பில் இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக – முழுமையாகப் பயனுள்ளதாக இருக்க, இப்பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளின் எண்ணிக்கை மட்டும் போதாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடுமையான ஆளில்லா விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட நவீன இடைமறிப்பு ஏவுகணைகள் உள்ளன. தற்போது, உக்ரேனிடம் உள்ள சில உபகரணங்களை – எதிர்காலத்தில் வழங்குவது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். மத்திய கிழக்கு நாடுகள் எங்களையும் வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களிடம் இல்லாத சில வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அவர்களிடம் உள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.
“இது குறித்து நாங்கள் ஒப்பந்தங்களை எட்ட விரும்புகிறோம். இன்று நிதிதான் மிகவும் பற்றாக்குறையான வளமாக உள்ளது. எங்கள் பாதுகாப்புத் துறை – தற்போது பாதித் திறனில் இயங்குகிறது. மேலும் எங்களுக்காக ஆளில்லா விமானங்களைத் தயாரிக்க எங்களுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது” உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


