தலைப்புச் செய்திகள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு 75 மில்லியன் ரூபாய் அபராதம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வழக்கமான கொள்முதல் நடைமுறைகளை மீறி, பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்திடமிருந்து, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பொருட்களை 2022ஆம் ஆண்டு கொள்முதல் செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பலர் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சொந்த நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாயை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலதிகமாக, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா மற்றும் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையக்குழுவின் (NMRA) முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜெயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயை அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) தலைமை நிர்வாக அதிகாரி டொக்டர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் (MSD) முன்னாள் பிரதி பணிப்பாளர் டொக்டர் துஷித சுதர்ஷன ஆகியோரும் 50 மில்லியன் ரூபாயை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) மற்றும் மேலும் இரண்டு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.