தலைப்புச் செய்திகள்

16 வருடங்கள் அச்சம் காரணமாக வெளிநாட்டில் இருந்த இலங்கை ஊடகவியலாளர்: அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பு

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனதீராவை, நீண்டகாலமாக நடைபெற்று வந்த ஒரு வழக்கில் – சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறு, கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டதுடன், அவர் மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்கியது.

16 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்த பின்னர், இம்மாதம் 11ஆம் திகதி இலங்கை திரும்பிய சந்தருவன் சேனதீர, கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவரை உடனடியாகக் காவலில் வைக்குமாறு, கம்பஹா பிரதம நீதவான் கவிந்திய நனயக்கார, 2016 நொவம்பர் 25 அன்று இன்டர்போல் மூலம் பிறப்பித்த பிடியாணையின் அடிப்படையில் அவரது கைது மேற்கொள்ளப்பட்டது.

முன்னர் அவருக்கு எதிராக பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், அவர் இந்த வழக்கில் ஒரு தரப்பு அல்ல என்று – குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. இதனையடுத்து நீதிமன்றம் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்ததுடன், அவரது பயணக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது.

லங்கா இ நியூஸ் பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த அச்சுறுத்தல்களை அடுத்து, சந்தருவன் சேனதீரா 2010 மார்ச் மாதம் இலங்கையை விட்டு வெளியேறினார்.

வெளிநாட்டில் இருந்தபோதும், அவர் அந்த செய்தி நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். அது பின்னர் 2011-ல் ஒரு தீவைப்புக் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

அவர் நாட்டை விட்டு வெளியேறி 16 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு முதன் முறை திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.