தலைப்புச் செய்திகள்

கால்நடை உரிமையாளர்களுக்கு வெள்ளி வரை காலக்கெடு; அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு உடனடி பலன்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் மாடு மற்றும் ஆடுகளைக் கைப்பற்றி, எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஜி. முபாறக் தெரிவித்தார்.

‘புதிது’ செய்தித்தளத்தை சற்று முன்னர் தொடர்பு கொண்டு – அவர் இந்த தகவலைக் கூறினார்.

எனவே, வெள்ளிக்கிழமை வரை – கால்நடை உரிமையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என்றும், சனிக்கிழமை தொடக்கம் வீதிகளில் திரியும் மாடுகள் மற்றும் ஆடுகளைக் கைப்பற்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதான வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் திரிகின்றமையினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றமையினையும், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதனையும் சுட்டிக்காட்டி, ‘புதிது’ செய்தித்தளம் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தது.

அந்த வகையில், இன்றும் (16) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் தேசியக் கல்வியியற் கல்லூரி ஆகியவற்றுக்கு முன்பாக – பிரதான வீதியினை மறித்து, மாடுகள் நிற்கின்ற அவல நிலையை சுட்டிக்காட்டி, ‘புதிது’ செய்தித்தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இதனையடுத்து, காட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.

பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் – நாளை இது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: சொரணையற்று நடந்துகொள்ளும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பில் மக்கள் விசனம்