தலைப்புச் செய்திகள்

சொரணையற்று நடந்துகொள்ளும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பில் மக்கள் விசனம்

அட்டாளைச்சேனை பிரதான வீதிகளில் கட்டாக்காலிகளாக உலவும் மாடுகள் தொடர்பில், அங்குள்ள பிரதேச சபைத் தவிசாளர் தொடர்ந்தும் அசிரத்தையாக நடந்து கொள்கிறார் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உலவும் மாடுகள் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக வீதியோரங்களில் தங்குகின்றன. இதால், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இது குறித்து – பல தடவை செய்திகளை வெளியிட்டும், இதுவரை – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்பாக நாள் முழுவதும் ஏராளமான மாடுகள் தங்குகின்றன. இதனால், அந்த இடம் அசுத்தமாகக் காணப்படுவதோடு, அங்கு அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

மேலும், கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு முன்பாகவும் இதே நிலைமையே காணப்படுகின்றது.

இதுபற்றி ‘புதிது’ செய்தித்தளம் அண்மையில் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்ட போதும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சொரணையின்றி இருந்து வருகிறார்.

இந்த மாடுகள் விடயத்தில் நடவடிகை மேற்கொண்டால், அவற்றின் உரிமையாளர்களின் அரசியல் ஆதரவை இழக்க நேரிடும் எனும் அச்சத்தினாலே, தவிசாளர் இவ்வாறு அசிரத்தையாக நடந்து கொள்கிறாரா எனவும், பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மண்வெட்டிகளைப் பிடித்து வேலை செய்கின்றமை போல் படமெடுத்து, அதனை சமூக ஊடகங்களில் வெளியிடும் தவிசாளர், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் உலவும் இந்த மாடுகள் தொடர்பிலும் கவனமெடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், தவிசாளர் இது விடயத்தில் தொடர்ச்சியாக அசிரத்தையுடன் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் நடந்து கொள்கின்றமையினால், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளர் ஏ.ஜி. முபாறக் – இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.