தலைப்புச் செய்திகள்

மார்க்ஸ்மேன் கழகத்தின் கிறிக்கெட் சுற்றுப் போட்டியில், ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் சாம்பியன் கிண்ணத்தை வென்றது

– வாஜித் –

ட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இரவு நேர மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் சாம்பியன் கிண்ணத்தை வென்றது.

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 02ஆம் திகதி ஆரம்பித்த இந்தச் சுற்றுப் போட்டியின், இறுதி ஆட்டம் நேற்று (06) இரவு நிறைவடைந்தது.

நாற்பது (40) அணிகள் கலந்துகொண்ட சுற்றுத் தொடரில், இறுதிப்போட்டிக்கு ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் மற்றும் நிந்தவூர் அட்வென்ஞர் அணியினர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இறுதிப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஈஸ்டர்ன் வோரியஸ் அணியினர் துடுப்பெடுத்தாட முன்வந்தனர். இதற்கிணங்க அந்த அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 25 பந்துகளுக்கு ஒரு விக்கட்டினை இழந்து 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

எனவே, 60 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்வென்ஞர் அணியினர், நிர்ணயிக்கப்பட்ட 25 பந்துகளுக்கு ஒரு விக்கட்டினை இழந்து 40 ஓட்டங்களை பெற்றனர்.

இதற்கிணங்க இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் அணியினர் சாம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டனர். இரண்டாம் இடத்தினை நிந்தவூர் அணி தனதாக்கியது.

போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை பெற்ற அணிக்கு வெற்றிக் கேடயத்துடன் 50 ஆயிரம் ரூபாய் பணப் பரிசில் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு வெற்றிக் கேடயத்துடன் 25 ஆயிரம் ரூபாய் பரிவு வழங்கப்பட்டது. சுற்றுப்போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்கிய நெஸ்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.எம். சப்னாஸ் பரிசுகளை வழங்கி வைத்தார்.

மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். முகம்மட் கியாத் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு அரையிறுதிவரை முன்னேறிய மேலும் இரு கழகங்களுக்கு – வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.