
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ். அப்துல் வாசித் இன்று (08) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பொத்துவில் பிரதேச சபையில் இரண்டு முறை தவிசாளராகப் பதவி வகித்த வாசித், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளராகவும் பதவி வகிக்கின்றார்.
இம்முறை முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு, ஆரம்பத்தில் ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ். நளீம் நியமிக்கப்பட்டார்.
ஆயினும், நடந்து முடிந்த ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனையடுத்து வெற்றிடமான அந்தப் பதவிக்கு தற்போது பொத்துவிலைச் சேர்ந்த வாசித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயினும், ஒரு வருடத்தின் பின்னர் ராஜிநாமா செய்ய வேண்டும் எனும் நிபந்தனையுடன், வாசித்துக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக பொத்துவில் வாசித், ஒரு வருட காலத்துக்கு நியமனம்



