
– நூருல் ஹுதா உமர் –
தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, இன்று (07) ‘வீதி பாதுகாப்பு தினம்’ எனும் கருப்பொருளின் கீழ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், சாய்ந்தமருது பொலிஸ் நிலையமும் இணைந்து, விசேட விழிப்புணர்வு நடவடிக்கையொன்றை சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்டன.
பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வின் போது, சுகாதார உத்தியோகத்தர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து, அதிவேகமாக பயணித்த வாகனங்கள், வீதி போக்குவரத்து சட்டங்களை மீறிய வாகனங்கள், தலைக் கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள், வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்திய சாரதி ஆகியோரைதடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.





