தலைப்புச் செய்திகள்

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷரப்பின் ஒலுவில் வீடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு: ஆவணங்களை ஒப்படைத்தார் மகன் அமான்

– எம்.வை. அமீர் –

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையில் உபவேந்தரின் அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வின்போது, மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மகன் அமான் அஷ்ரப், இதற்கான ஆவணங்களை, பதில் உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்புக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறைய சொத்துக்கள் இருப்பதாக அவருடைய அரசியல் எதிரிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த போதிலும், அஷ்ரப் – அவரின் பெயரில் வைத்திருந்த, ஒரேயொரு அசையாச் சொத்து இந்த ஒலுவில் வீடுதான் என, இதன்போது அவரின் மகன் அமான் அஷ்ரப் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை 1995 இல் எம்.எச்.எம். அஷ்ரப் உருவாக்கியதன் மூலம் இந்த பிராந்தியத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் உயர் கல்விக்கு பெரும் பங்காற்றினார்.

அவருடைய அயராத முயச்சி மற்றும் அவருக்கிருந்த அரசியல் பலம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவைப் பயன்படுத்தி இலங்கைக்கான தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றை முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற ஒலுவில் பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்தார்.

மேலும், முழு இலங்கை மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராகவும் அஷ்ரப் பார்க்கப்படுகிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் இரண்டு பீடங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று ஆறு பீடங்களுடன் உள்வாரியாக மாத்திரம் 8000 அளவிலான மாணவர்களையும் அதற்குச் சமாந்தரமான அளவில் வெளிவாரி மாணவர்களையும் கொண்டு இயங்கி வருகின்றது.

இந்தப் பின்னணியிலேயே, ஒலுவில் பிரதேசத்தில் அஷ்ரப் அமைத்த வீட்டையும் அதனைச் சுற்றியுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த நிலத்தினையும் – அவரின் மகன் அமான் அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளார்.

இதற்காக தனது தாய் பேரியல் அஷ்ரப் முழு வழிகாட்டல் வழங்கியதாக அமான் அஷ்ரப் தெரிவித்தார்.

குறித்த காணியை பெற்றுக்கொள்வதில் ஆரம்பக்கட்டத்தில் அயராது உழைத்த முன்னாள் உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அவரோடு இணைந்து செயற்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோரும் – நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கவனிப்பாரற்றுக்கிடந்த குறித்த வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள காணி ஆகியவற்றை, கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு, பல்கலைக்கழகத்துக்கு பெற்றுக்கொள்வதற்காக – பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் மற்றும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச். நபார் உள்ளிட்ட குழுவினர் எடுத்துக்கொண்ட மீள் முயச்சிகள் காரணமா – குறித்த காணி பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ளது.

ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் சார்பில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச். ஹாறுன், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுடீன், சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச். நபார், மற்றும் சட்டம் மற்றும் ஆவணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிப்பதிவாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோரும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மகன் அமான் அஷ்ரபுடன் வருகை தந்திருந்த குழுவினரும் பங்குகொண்டிருந்தனர்.