தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த ஆசனங்களுக்கு, சபீஸ் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் சிபாரிசு

– நூருல் ஹுதா உமர் –

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் – அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மூன்று ஆசனங்களுக்குமான பெயர்களை, கட்சியின் தலைமைக்கு அக்கரைப்பற்று மத்திய குழு சிபாரிசு செய்துள்ளது.

நேற்று மாலை (18) எஸ்.எம். சபீஸ் தலைமையில் கூடிய – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழு, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு அக்கரைப்பற்றின் அனைத்துப்பள்ளி வாசல்களின் முன்னாள் தலைவர் எஸ்.எம். சபீஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னாள் பணிப்பாளர் பொறியியலாளர் என்.ரி.எம். சிராஜுடீன் ஆகியோரை சிபாரிசு செய்துள்ளது.

அதேவேளை அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு எம்.எம். முபாஸ் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.

அக்கறைப்பற்று அரசியல் பயணத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தும் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், சுமார் 7500 வாக்குகளை அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் பெற்றுள்ள வேளையில், புதிதாக அக்கரைப்பற்று அரசியல் பரப்பில் கால் பதித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2500 வாக்குகளைப் பெற்றுள்ளது.