
– நூருல் ஹுதா உமர் –
அட்டாளைச்சேனை, இறக்காமம் போன்ற பிரதேச சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைபற்கு – தேசிய காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அரசியலில் தன்னை மாய்த்துக் கொள்ளும் விதமாக அமைந்துள்ளது என்று, ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் எச்சரித்துள்ளார்.
“தேசிய காங்கிரசின் மக்கள் செல்வாக்கை நிரூபித்து, எப்போதும் தம்முடனையே மக்கள் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை அதாஉல்லா கைப்பற்றியுள்ளார்” என்று யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
அதாஉல்லாவின் இந்த வெற்றிகள் பாராட்டுக்குரிய விடயவை என்றாலும், மக்களின் தீர்ப்புக்கேற்றபடி தேசிய காங்கிரஸ் தலைவர் நடந்துகொள்ள வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மு.காங்கிரஸை நிராகரித்து விட்டு, தேசிய காங்கிரஸுக்கு மக்கள் வழங்கிய ஆதரவை – அட்டாளைச்சேனை பிரதேச சபை விடயத்தில் அதாவுல்லா தாரை வார்த்து விடக் கூடாது என்றும் யஹ்யாகான் கூறியுள்ளார்.
“மக்களின் நம்பிக்கையை ஏ.எல்.எம்.அதாவுல்லா பாதுகாக்க வேண்டும். அட்டாளைச்சேனையில் மு.காங்கிரஸுடன் கூட்டுச் சேர்வது ஆரோக்கியமற்றது. மட்டுமன்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.காவுடன் இணைந்து ஆட்சியமைப்பது என்பது அதாவுல்லாவை படு குழியில் வீழ்த்தி விடும்” என்றும், ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் யஹியாகான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
“அக்கரைப்பற்று மக்களின் தீர்மானத்தை அதாவுல்லா புறந்தள்ளக் கூடாது. முஸ்லிம் காங்கிரஸின் பசப்பு வார்த்தைகளை நம்பி அதாவுல்லா செயற்படுவாராக இருந்தால் இனி வரும் தேர்தல்களில் தேசிய காங்கிரஸ் மண் கவ்வும் என்பதை உறுதியாக கூறி வைக்க விரும்புகிறேன். எனவே, மக்களின் தீர்மானத்தை மதித்து முகாங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சிக்கும் முடிவை – அதாவுல்லா மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்” என்றும் யஹியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்பான செய்தி: மரமும், குதிரையும் அட்டாளைச்சேனையில் இணைகின்றன: ஒலுவிலுக்கு பிரதித் தவிசாளர் பதவி



