
– மரைக்கார் –
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் 08 ஆசனங்களை வென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ள தேசிய காங்கிரஸ் ஆகியவை இணைந்து, அந்த சபையில் ஆட்சியமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூர் மட்டத் தலைவர்கள், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் 08 வட்டாரங்களை வென்றது. இதேவேளை, விகிதாசார அடிப்படையில் தேசிய காங்கிரஸுக்கு 02 ஆசனங்கள் கிடைத்தன.
அரசியல் மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை, மிகக் கடுமையாக அதாஉல்லா தாக்கிப் பேசி வந்த நிலையிலேயே, மேற்படி கட்சிகளுக்கிடையில் இந்த அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க தேசிய காங்கிரஸுக்கு விகிதாசார பட்டிலில் கிடைத்துள்ள 02 பிரதிநிதித்துவங்களுக்கும் – சுழற்சி முறையில் உறுப்பினர்களை நியமிப்பதென தேசிய காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அதற்கிணங்க, முதலில் ஒலுவிலைச் சேர்ந்த எம்.எஸ்.எம். நிஹால் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த பாறூக் நஜீத் ஆகியோரை உறுப்பினர்களாக நியமிப்பதெனவும் தேசிய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவை இணைந்து அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் போது, தவிசாளர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் பெறுவதெனவும், பிரதித் தவிசாளர் பதவியை தேசிய காங்கிரஸுக்கு வழங்குவதெனவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தேசிய காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.
ஒலுவிலுக்கு பிரதித் தவிசாளர்
அவ்வாறு தேசிய காங்கிரஸுச்கு கிடைக்கும் பிரதித் தவிசாளர் பதவிக்கு, ஒலுவில் நிஹால் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, முஸ்லிம் காங்கிரஸுக்கு தவிசாளர் பதவி கிடைக்குமாயின், அதனைப் பெற்றுக் கொள்வதற்காக, முஸ்லிம் காங்கிரஸினுள் பலர் முயற்சித்து வருகின்றனர். ஆயினும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மூன்று முறை உறுப்பினராக இருந்து, இம்முறையும் வெற்றி பெற்றுள்ள ஏ.எஸ்.எம். உவைஸுக்கே, தவிசாளார் பதவி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு, அதாஉல்லாவின் ஆதரவைப் பெற மு.காங்கிரஸ் முயற்சி: தவிசாளர் யார்?



