
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட மோதலின் போது – இனப்படுகொலை நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் இலங்கை அரசாங்கம் கூறுவதாக, வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை (14) அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சு, இந்த தவறான கதையை இலங்கை உறுதியாக நிராகரிப்பதாகவும், இது கனடாவுக்குள் தேர்தல் ஆதாயங்களுக்காக பிரச்சாரம் செய்யப்பட்டதாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக – கனடா கண்டுபிடிக்கவில்லை என்பதை, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கனடாவின் வெளியுறவு, வர்த்தக மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கனடா 2006 இல் தமிழீழ விடுதலைப் புலிகளை (எல்.ரி.ரி.ஈ) ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததாகவும், ஜூன் 2024 இல் அதனை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘கனடா – பிராம்ப்டனில் உள்ள சிங்குவகூசி பூங்காவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படும் ஒரு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு – இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளது. பிராம்ப்டன் நகர சபையின் இந்த வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு கனடாவின் மத்திய அரசை, இலங்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த விடயத்தை, இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு அவமானகரமானதாக இலங்கை கருதுகிறது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளின் அடிப்படையில் நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அமையும். மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் உண்மையான முயற்சிகளைத் தடுக்கிறது என்று அது உறுதியாக நம்புகிறது’ என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டமை குறித்து, இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் தெரிவித்தார்.




