
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிட்டால், அதற்கு நாடாளுமன்றத்தில் 122 ஆசனங்கள் கிடைத்திருக்கும் என, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை நோக்குமிடத்து, தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆணை – இல்லாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி – வெற்றி பெற்ற அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று புதன்கிழமை (14) கொழும்பில் உள்ள விஹாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60வது ஆண்டு விழாவில் பேசும்போது, அவர் இந்த விடயங்களை கூறினார்.
மக்களின் தேர்தல் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அனைத்து முயற்சிகளும் – அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் வழிமுறைகளின் முழு பலத்தையும் பயன்படுத்தி எதிர்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆணை என்பதன் உண்மையான அர்த்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நகர சபைகளில் அதிகாரத்தை தன்னிச்சையாக தீர்மானிக்கலாம் அல்லது ஒன்று அல்லது இரண்டு தனிநபர்களின் கைகளில் குவிக்கலாம் என்று நம்பும் தரப்புக்கள் உள்ளன. ஆனால் இலங்கையில் முதல் முறையாக, 267 பிரதேச சபைகளின் கட்டுப்பாட்டை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது. மக்களின் ஆணையின் கீழ், அவை ஒவ்வொன்றிலும் நிர்வாகங்களை அமைக்க எங்களுக்கு உரிமை உள்ளது, ”என்றார்.
உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியினையும் – சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எச்சரித்தார்.
“யாராவது எங்கள் ஆட்சியைத் தடுக்க முயன்றால், அத்தகைய முயற்சிகளைச் சமாளிக்க சட்டத்தில் போதுமான இடம் உள்ளது. அது தோல்வியுற்றால், அதை மேலும் எடுத்துச் சென்று, அரசிலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்குக் கூட எங்களுக்கு நாடாளுமன்றத்தில் பலம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.



