
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் – இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் அசோக அரியவன்ச, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதில் 15 ஆண்டுகள் அவரது பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார்.
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (சிஐடி) தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்), ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் உரையாடுவதற்கான முயற்சிகளை ரணிலின் மேற்படி பாதுகாப்பு மேற்கொண்டதன் காரணமாகவே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி நோக்கத்துக்காக ரணிலின் பாதுகாப்பு அதிகாரி – சிஐடி அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டதாக பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



